Thursday, September 4, 2014

நெற்றியில் விபூதி.. மடாதிபதியுடன் சந்திப்பு.. நாத்திகத்தை மறந்தாரா கமல்..?

பிரிக்கமுடியாத விஷயங்களில் ஒன்று கமல்ஹாசனும் சர்ச்சைகளும். வழக்கமாக கமலின் திரைப்படங்கள்தான் சர்ச்சைகளில் சிக்கும். ஆனால் இப்போது கமலின் ஒரு புகைப்படம்!

மலையாளத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில், ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘த்ரிஷ்யம்’. த்ரில்லர் படமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த இது, கமலின் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது

அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஜீயர் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை அவரது மடத்துக்கே சென்று கமல் சந்தித்ததுதான் இப்போது இணையதளங்களில் ஹாட் டாபிக்.

பகுத்தறிவு கருத்துக்களையும், நாத்திக சிந்தனைகளையும் பேசி வரும் கமல் நாங்குநேரி ஜீயரை சந்தித் திருப்பது குறித்து இணையதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நாங்குநேரியில் வட்டமிட்டபோது...

நாங்குநேரி முழுக்க கமலின் ‘பாப நாசம்’ படத்தின் படப்பிடிப்பு நினைவில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோ பயணத்தில், பாதசாரிகள் கூட்டத்தில், இப்படி மக்கள் அதிகமாக சந்தித்துக் கொள்ளும் இடங்களில் எல்லாம் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். “கமலு நல்ல எலுமிச்சம் பழ கலரு பாத்தியாடே!”, “என்னமா நடிக்கறாரு?” என்று நெல்லைச் சீமையின் மண் வாசனையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், “அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் அன்புதான் கடவுள் என்றும், தன்னை நாத்திகவாதி என்றும் காட்டிக் கொண்ட கமல் வான மாமலை மடத்தின் ஜீயரை ஏன் சந்திக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

இந்த சந்திப்பு குறித்து நாங்கு நேரியில் உள்ள வானமாமலை மடத்தின் 31வது ஜீயரான ஸ்ரீ மதுரகவி வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட் டோம். “அவர் நடித்து வரும் படத்தின் ஆன்மீக காட்சி ஒன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுத்தார்கள். இந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆன்மிகம் குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.தொடர்ந்து மடத்தில் உள்ள பழங்கால பல்லக்குகள் போன்றவற்றையும் புகைப் படம் எடுத்து சென்றதாக மடத்தின் சிப்பந்திகள் தெரிவித்தனர்” என்றார் ஜீயர்.

உங்களுடனான சந்திப்புக்கு பின்பு அவர் ஆன்மிகப் பாதையில் திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, “அவர் முகத்தோற்றமும், அதில் குடி கொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும்” என்று புதிர் போட்டு முடித்தார்.

இதற்கிடையே பாபநாசம் திரைப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், இந்த சந்திப்பு குறித்து தனது வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கின்றார். அதில், “வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்த போது நானும் அங்கிருந்தேன். நாங்குநேரி வானமா மலை ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது. அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரினோம். ஜீயர் அனுமதி அளித்தார்.அங்கு படப்பிடிப்பு நடந்த போது கமல் ஜீயரை சந்தித்து மரியாதை செலுத்தினார். அந்தப் புகைப்படம்தான் அது. நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என்பதாக நான் நினைக்கவில்லை.திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரை காண ஒருமுறை ஈ.வெ.ரா. சென்றார். திரும்பும் போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்து கொண்ட படமும் வெளியாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comments:

  1. இது மேக்கப் தான் பாஸ்.. ஜீயரைப் பார்க்க நாமம் போட்டு போகணும்.. பட்டை இல்லை என்று குழந்தைக்கும் தெரியுமே..

    ReplyDelete

காப்பகம்