Friday, August 15, 2014

மனித இனம் அழியப் போவது பூமியில் அல்ல..!: இப்படியும் ஒரு சினிமா..!

நவம்பர் மாதத்தில் வெளியாகப் போகும் ஒரு படத்துக்கு இப்போதே உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கிவிட்டது. 'அந்த' ஸ்டார் படமா?, அதுல அவ்வளவு நல்ல பாட்டு இருக்கா..?.. 2 'கீரோயினியா' (ஹீரோயின்), பரோட்டா சூரி இருக்காரா? என்று கேட்காதீர்கள்.

அழிந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து கிளம்பி அண்ட சராசரங்களை எல்லாம் கடந்து, அழுக்கில்லாத, ஒரு அழகிய பூமியைத் தேடும் படம் இது. படத்தின் பெயர் "இன்டர்ஸ்டெல்லார்".

"Mankind was born on Earth. It was never meant to die here''

இது தான் "இன்டர்ஸ்டெல்லார்" படத்தின் பஞ்ச் லைன்..!

கிறிஸ்டோபர் நோலன். பேட்மேனை மையமாக வைத்து டார்க் நைட் வரிசையில் 3 படங்களை இயக்கிய மெகா டைரக்டர். இவரது படங்களில் பேட்மேன் தான் ஹீரோ என்றாலும் அவர் 100 பேரை அடித்து துவம்சம் எல்லாம் செய்ய மாட்டார். வில்லன் கதாபாத்திரம் தான் பேட்மேனை விட பலம் வாய்ந்ததாக இருக்கும். மிரட்டலான பின்னணிக் காட்சிகள், பயமுறுத்தும் இசையுடன் உளவியல்ரீதியில் நம்மை பல கேள்விகளுக்கு உள்ளாக்கி, அடி மனதில் அச்சத்தை ஊட்டி திரைக் கதையை நகர்த்துவதில் அசகாய சூரர் நோலன்.

கனவுகளுக்குள் ஊடுருவி ஒருவரின் வாழ்க்கையை கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை மாற்றிப் போடும் கதையான இன்ஸப்ஷன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்கள் கிறிஸ்டோபர் நோலனை நன்றாக புரிந்து கொள்ள முடியும். லியானர்டோ டி காப்ரியோ நடித்த இந்தப் படத்தில் 3 அடுக்குகளாய் ஒருவரின் கனவுக்குள் புகுந்து (a dream within a dream within a dream) நிகழ்வுகள் வசப்படுத்தப்படும். இப்படி பிறரால் நுழைய முடியாத, யூகிக்க முடியாத தளத்தில் நின்று மெஸ்ஸி மாதிரி பந்தாடுபவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவர் தான் 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தை இயக்கியுள்ளார்.

மாத்யூ மெக்கொன்னாகி, ஆன்னி ஹேதவே, ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லன் பர்ஸ்டின், மைக்கேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தில்.

எதிர்காலம். சுற்றுச்சூழல் நாசமாகி, உலக நாடுகளின் பொருளாதாரங்கள் சீர்குலைந்து, பசியும் பட்டினியுமாக உலகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் வாழும் இந்த 20ம் நூற்றாண்டு மனிதர்கள் தான் மிக முக்கிய காரணம். இந்த அழிந்து போன உலகிலிருந்து தொடங்குகிறது 'இன்டர்ஸ்டெல்லார்' பயணம். Interstellar என்பது 'இரு வேறு நட்சத்திரங்களுக்கு அல்லது உலகங்களுக்கு இடையிலான' என்று பொருள்.

Universe எனப்படும் நமது பேரண்டம் நம்மால் யூகிக்க முடியாத அளவுக்குப் பெரியதாய், விரிந்ததாய், விரிந்து கொண்டே இருப்பதாய் இருக்கிறது. இதில் தான் பல ட்ரில்லியன் நட்சத்திர மண்டலங்களும், சூரிய குடும்பங்களும், கிரகங்களும், தூசு மண்டலமும் பரவிக் கிடக்கின்றன. இதில் wormhole என்று ஒரு கொள்கையை சமீபகாலமாக முன் வைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது, இதற்கு சரியான அர்த்தத்தை நமது பாஷையில் சொன்னால், 'குறுக்கு சந்து' என்று பொருள் வரும். (துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து மாதிரி)

யுனிவர்ஸை ஒரு பேப்பராக நினைத்து விரித்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரின் ஒரு முனையில் ஒரு புள்ளியை வையுங்கள். இன்னொரு முனையில் இன்னொரு புள்ளியை வையுங்கள். இந்த தூரத்தை குறித்துக் கொள்ளுங்கள். இப்போது இரு புள்ளிகளும் ஒன்றின் மேல் ஒன்று வருவது போல பேப்பரை அப்படியே மடியுங்கள். இப்போது இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் பல மடங்கு குறைந்திருக்கும். இது தான் wormhole!. அண்டத்தின் மிகப் பரந்து விரிந்த தூரத்தை wormhole மூலம் துரிதமாய் கடக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அப்ப யுனிவர்ஸை மடக்க முடியுமா, வார்ம் ஹோல் இருக்கா என்று கேள்விகள் எழும். இவையெல்லாம் நானோ, கிறிஸ்டோபர் நோலனோ சொல்லும் கதை அல்ல. ஜெனரல் ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்ன ஐன்ஸ்டீனும் அவருடன் இணைந்து ஹைட்ரஜன் அணு ஆராய்ச்சிகளைச் செய்த நேதன் ரோசனும் சொன்னவை. wormholeக்கு ஐன்ஸ்டீன்- ரோசன் பிரிட்ஜ் என்ற பெயரும் உண்டு. இவை வெறும் கற்பனையான் குறுக்கு சந்துகள் அல்ல, இயற்பியல் விதிகளின்படி இந்த சந்து சாத்தியமே என்கின்றனர் ஐன்ஸ்டீனும் ரோசனும்.

'இன்டர்ஸ்டெல்லார்' சினிமாவைப் பத்தி ஆரம்பித்துவிட்டு பிஸிக்ஸ் பாடம் நடத்துறியே என்று கோபமா?. வரும், தப்பில்லை. ஆனால், நாக்கையும் மூளையையும் 'நாக்குமுக்கா' போட வைக்கும் 'இஞ்சிமரபா' இயற்பியல் விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொண்டு இந்தப் படத்தைப் பார்த்தால் மேலும் ரசிக்க முடியும் என்பது நிச்சயம். இந்தப் படத்தின் கதை நாயகர்கள் wormhole மூலம் வேறோரு உலகைத் தேடி பயணிப்பதே 'இன்டர்ஸ்டெல்லார்' கதை.

சமீபத்தில் தான் இயக்குனர் அல்போன்ஸோ க்யூரோனின் கிராவிட்டி படம் வெளி வந்து, விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெளியே அல்லாடுவதை தத்ரூபமாகக் காட்டியிருந்தார். இதுவரை வந்த விண்வெளிப் படங்களிலேயே மிகச் சிறந்த, உண்மையிலேயே விண்வெளி எப்படி இருக்கும் என்பதைக் காட்டியவர் அல்போன்ஸோ க்யூரோன். கிராவிட்டி படத்தைப் பார்த்த உலக மக்களுக்கு அதைவிடச் சிறப்பான காட்சிகளுடன் படம் தந்தால் மட்டுமே கிறிஸ்டோபர் நோலனின் மானம் தப்பும். இது அவருக்குத் தெரியாதா.. இதனால் விண்வெளிக் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் உலகம் வாழ லாயக்கில்லாத இடமாகிவிட, வேறு ஒரு உலகைத் தேடி கிளம்புகிறது நாஸா விஞ்ஞானிகள் குழு. இது ஏதோ விண்வெளி மையத்துக்கு போவது போல 2 நாள் வேலை அல்ல. நமது சூரிய மண்டலத்தை, புளுட்டோவை எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டிய பல வருடப் பயணம். வார்ம்ஹோலில் பயணித்து மனிதர்கள் வசிக்கக் கூடிய மாதிரி ஏதாவது கிரகம் இருக்கிறதா என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது இந்த விஞ்ஞானிகள் குழு. இதற்காக என்டூரன்ஸ் என்ற விண்கலத்தில் பயணிக்கின்றனர்... இவர்களது முயற்சி வெல்கிறதா... தேடலின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

கனடாவின் பனிப் பிரதேசமான அல்பெர்ட்டா மற்றும், லாஸ் ஏஞ்சலெஸ் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தியேட்டர்களில் வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நவம்பர் 5ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறதாம். நவம்பர் 6ம் தேதி இங்கிலாந்திலும், 7ம் தேதி அமெரிக்காவிலும் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் பார்ப்பவர்களை அந்தக் கதையுடனேயே முழு அளவில் கலக்க வைத்து, சம்பவங்களை நாம் நேரில் அனுபவிப்பது மாதிரி உணர வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் 

1 comments:

  1. நோலனோட , பிரஸ்டீஜ் , மெமன்டோ படங்களையும் குறிப்பிட்டுருக்கலாம்ணா! உலகின் தலைசிறந்த 3 திரைக்கதை அம்சங்கள் உள்ள படங்கள்ல மெமென்டோவும் ஒன்னு. இன்செப்சனவிட கடினமான திரைக்கதை கொண்டது பிரஸ்டீஜ்ங்றது என்னோட தாழ்மையான கருத்து. இன்செப்ஷன் படம் , வரு நாவலின் அத்தியாயத்தில் இருக்கும் பகுதி1 , பகுதி 2, பகுதி 3 மாதிரி பயணிக்கும்.ஆனா , பிரஸ்டீஜ் , வேற களத்துல இருக்கும்.


    இவ்ளோ நாளா ,ஐன்ஸ்டைன் கண்டுபிடிச்ச தியரியோட பேர் black hole-னு நினைச்சேன். ஆனா , அது worm hole-னு சொன்னதுக்கு மிக்க நன்றிணா!! இந்த படத்த ,உங்கள மாதிரியே நானும் பயங்கரமா எதிர்பார்க்கறறேன்..

    ReplyDelete

காப்பகம்