Wednesday, August 20, 2014

குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த வாலிபரின் கண்ணீர் கதை

ஒல்லியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அடி மனதுக்குள் ஒரு சோகம் அப்பிக் கிடக்கும். கொஞ்சம்... குண்டானால் நல்லா இருக்குமே என்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக ஒரு சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் உடலை குண்டாக்குவதற்காக சிகிச்சை மேற்கொள்பவர்களும் உண்டு.

இப்படி குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபர் ஒருவர், பாஸ்போர்ட்–விசாவுடன், ஆடைகளையும் பறி கொடுத்து ஜட்டியுடன் சுற்றித் திரிந்துள்ளார்.

கிண்டியில் வந்து இறங்கிய அவர், மாதவரத்தில் வைத்து போலீசில் சிக்கினார். சென்னை மாநகரில் ஜட்டியுடன் சுற்றி திரிந்த அவரது கண்ணீர் கதையை பார்ப்போம்.

கடந்த மாதம் 26–ந் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாதவரம் பகுதியில் இருந்து ஒருவர் போன் செய்தார். மாதவரம் பஸ் நிலையத்தில் ஜட்டியுடன் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சுற்றித் திரிவதாக கூறிவிட்டு அவர் போனை துண்டித்து விட்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அங்கு விரைந்து சென்று, ஜட்டியுடன் திரிந்த அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் போல இருந்தார்.

அவரிடம் மாதவரம் துணை கமிஷனர் விமலாவும் விசாரணை நடத்தினார்.

கருப்பின வாலிபரிடம் ஆங்கிலத்தில் போலீசார் பேசிப் பார்த்தார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் திண்டாடிய அவர் புரியாத ஒரு மொழியில் பேசினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த போலீசார், அதே பகுதியில் வசித்து வந்த நைஜீரிய வாலிபர் ஒருவரை அழைத்து வந்து பேச வைத்தனர். அப்போது தான் ஜட்டியுடன் சிக்கியவர் சூடான் வாலிபர் என்பதும், அவர் பேசுவது சூடான் மொழி என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் நைஜீரிய வாலிபரால் சூடான் மொழியை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சென்னையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் சூடான் வாலிபர்களை போலீசார் தேடிப் பிடித்தனர். அதில் ஒருவரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்து வந்து சூடான் வாலிபரிடம் பேச வைத்தனர்.இதன் பிறகே அவர் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிய வந்தன.

சூடான் வாலிபரின் பெயர் நேவல்கூப் என்பதும், அவர் உடலை குண்டாக்கும் சிகிச்சைக்காக புரோக்கர் ஒருவர் அங்கிருந்து அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

சூடானில் 30 மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த இவரை அங்குள்ள மோசடி ஆசாமி ஒருவன் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் முகவரியை கொடுத்து, அங்கு போய் தங்கி இருந்து சிகிச்சை எடுத்தால் உடல் குண்டாகிவிடும் என்று கூறியுள்ளான். இதனை நம்பி, மொழிப் பிரச்சினையை பற்றியெல்லாம் அறியாத நேவல் கூப் விமானம் மூலம் இங்கு வந்து சேர்ந்துள்ளார்.

கிண்டியில் நேராக குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் 200 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.9 ஆயிரம்) மட்டுமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் அங்கு தகராறில் ஈடுபட்டார். இது பற்றி கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நேவல் கூப்பை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் பாஸ்போர்ட், விசா ஆகிய அனைத்து ஆவணங்களும் இருந்துள்ளன.

அவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியாத நிலையில், ஓட்டல் ஊழியர்களிடம் சொல்லி, விமான நிலையத்தில் கொண்டு அவரை விட்டு விடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி விமான நிலையத்தில் கொண்டு நேவல் கூப் இறக்கிவிடப்பட்டார். ஆனால் சொந்த நாட்டுக்கு செல்லாமல், அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நேரத்தில்தான் வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பாஸ் போர்ட்–விசா, அமெரிக்க டாலர், ஆகியவற்றுடன் ஆடைகளையும் பறிகொடுத்துள்ளார்.

இதையடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் ஜட்டியுடன் சுற்றி திரிந்த நேவல்கூப் கடைசியில் மாதவரத்தில் வைத்து பிடிபட்டுள்ளார்.

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் காயத்துடன் காணப்பட்ட அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்த மாதவரம் போலீசார், பின்னர் டெல்லியில் உள்ள தூதரகத்தின் உதவியுடன் மாற்று பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை தயார் செய்தனர். கையில் பணம் இல்லாமல் தவித்த சூடான் வாலிபரின் கையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சென்னையில் படிக்கும் சூடான் மாணவர் ஒருவரும், அவருடன் சென்று சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கிண்டியில் போலீசிடம் சிக்கியவுடனேயே, தூதரகம் அலுவலகத்தில் பேசி அவரை அனுப்பி வைத்திருந்தால் இத்தனை பிரச்சினைகளையும் நிச்சயம் தவிர்த்து இருக்கலாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்