Saturday, September 13, 2014

சிகரம் தொடு (2014) - திரைவிமர்சனம்

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.

விக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.

மோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.

இதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.

இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.

அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.

படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.

இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.

முதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.

வானவராயன் வல்லவராயன் (2014) - திரைவிமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால், எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. ஒருநாள் தனது தம்பி வல்லவராயனுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்துக்கு போகிறார் வானவராயன்.

அந்த திருமணத்தில் அஞ்சலி (மோனல் கஜ்ஜார்)யை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜு(எஸ்.பி.சரண்)க்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.

இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் (ஜெயபிரகாஷ்) வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.

இதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.

இதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.

இறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.

அஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.

நாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.

படத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.

குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.

யுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.

மொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ போட்டியில்லை

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பு ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பை, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினார்கள். அந்த வாலிபருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கத்துரை. அவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 26). வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி. பாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் வேலைக்கும் செல்லவில்லை.

காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவாராம். சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

4 நாட்களுக்கு முன்பு பகலில் சிலருடன் ஊர் சுற்றிவிட்டு, இரவில் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அன்று முழுவதும் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அவருடைய தாயார் பத்திரம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்துள்ளனர். வாய் பேச முடியாதவர் என்பதால், எதையும் அவரால் சொல்ல முடியவில்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மறுநாள் காலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, வயிற்றில் கட்டி போன்று ஏதோ ஒரு பொருள் இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர்.

மாலையில் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து பாலகிருஷ்ணனை அழைத்து வந்துவிட்டனர். அதன்பின்பு அவருக்கு வயிற்றுவலி அதிகமாகிவிட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். சாப்பிடவும் இல்லை. எனவே அவரை லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பாலகிருஷ்ணன் வயிற்றில் இருக்கும் பொருளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கி, 2 மணி நேரம் நடந்தது.

அதன் பின்பு டாக்டர்கள் தெரிவித்த கருத்துகள், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அதாவது, பாலகிருஷ்ணன் வயிற்றில் கட்டியோ, உணவுப் பொருட்களோ இல்லை. பெண்கள் அணியும் செருப்பு ஒன்று அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது தெரியவந்தது.

அது அவரது வயிற்றுக்குள் சென்றது எப்படி? என்பது குறித்து டாக்டர் பி.தமிழரசு கூறியதாவது:–

வயிற்று வீக்கம், கடுமையான வயிற்று வலியாலும் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, வயிற்றில் கட்டி போன்று இனம்காண முடியாத பொருள் இருந்ததை அறிந்தோம்.

மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், வயிற்றில் செருப்பு இருந்தது தெரியவந்தது. ஆசனவாய் வழியாக அந்த செருப்பை திணித்து இருக்கிறார்கள். அது பெருங்குடலை சென்றடைந்ததால், பெருங்குடலில் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் பெருங்குடல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர் தமிழரசு கூறினார்.

விசாரணை

பாலகிருஷ்ணனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து, ஆசனவாய் மூலம் செருப்பை திணித்தது குறித்து அவருடைய குடும்பத்தினர், கூடங்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை..!

நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா, தம்பிராமைய்யா உட்பட பலர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படத்தை மகாலட்சுமி மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ளார்.

இவர், இந்த படத்தின் காப்புரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறி பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 5-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெரும் தொகை செலவு செய்தோம். இதன்பின்னர், கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில், வானவராயன் வல்லவராயன் படத்தின் உரிமத்தை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மகாலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக்கேட்டோம். அவருக்கு எதிராக போலீசிலும் புகார் செய்தோம். இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்தனர். ரூ.85 லட்சம் இதுவரை திருப்பித்தரவில்லை. இதற்கிடையில், இவர்கள் செய்த இந்த மோசடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் சுரேஷ் சத்தியா மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்த சூழ்நிலையில், எங்களுக்கு தரவேண்டிய ரூ.85 லட்சத்தை தராமல், வானவராயன் வல்லவராயன் படத்தை செப்டம்பர் 12-ந் தேதி (இன்று) திரையிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.கோவிந்தராஜன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன். எனவே, வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். ஒருவேளை மனுதாரருக்கு தரவேண்டிய தொகையை எதிர்மனுதாரர் கொடுத்துவிட்டால், படத்தை அவர்கள் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.

கள்ளசாவி (2014) - திரைவிமர்சனம்

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம் ராகேஷ் மட்டுமில்லாது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்துப் போய்விடுகிறது.

நெடுநாளாக தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தாம்பத்ய சுகம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார் ராகேஷ். இவருடைய வீட்டிலேயே இருந்து மனைவிக்கு பணிவிடை செய்துவரும் வர்ஷா மீது இவரது பார்வை விழுகிறது. ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் அவளை பலாத்காரம் செய்துவிடுகிறார் ராகேஷ்.

மறுநாள் காலையில் தனது கற்பு போய்விட்டதாக சொல்லி புலம்பும் வர்ஷாவை சமாதானம் செய்கிறார் ராகேஷ். ஆனால், வர்ஷா சமாதானமாக மறுக்கிறாள். தன்னுடைய மானம் அவளால் பறிபோய்விடுமோ என பயப்படும் ராகேஷ் அவளை வேலையிலிருந்து தூக்கிவிட முடிவெடுக்கிறார். ஆனால், அவளுடைய மனைவி அவள் மீது அதிக பாசமாக இருப்பதால் அவளை வேலையிலிருந்து தூக்க முடியவில்லை.

இறுதியில் ராகேஷ் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.

‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வர்ஷா, இந்த படத்தில் சற்று உடல் பெருத்து கூடுதல் கவர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை. செல்வந்தருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இவருடைய முகபாவணைகள் நம்மையும் கிரங்க வைக்கின்றன. படம் முழுக்க சேலையுடன் வந்தாலும் கவர்ச்சியில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ராகேஷ் கதாபாத்திரத்தில் வரும் கவின் மற்றும் அவரது மனைவியும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். ராகேஷின் மகளாக வருபவர் மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவர் அணிந்திருக்கும் உடை நம்மை கிளுகிளுப்பாக்குகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் அவசியமான ஒன்று. ஆனால், அந்த காமம் அளவுக்கு மீறி சென்றால் அது நமக்கே ஆபத்தில் முடியும் என்ற ஆழமான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராஜேஷ்வரன், கதையில் ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராகேஷ் மது குடிக்கும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

ராஜ் பாஸ்கர் இசையில் பாடல்களை கேட்கவே முடியவில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. என்.கிருஷ் ஒளிப்பதிவு ஓரளவு பரவாயில்லை.

மொத்தத்தில் கள்ளசாவி களவாடவில்லை

காப்பகம்