Friday, September 12, 2014

வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை..!

நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா, தம்பிராமைய்யா உட்பட பலர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ திரைப்படத்தை மகாலட்சுமி மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ளார்.

இவர், இந்த படத்தின் காப்புரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறி பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 5-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெரும் தொகை செலவு செய்தோம். இதன்பின்னர், கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில், வானவராயன் வல்லவராயன் படத்தின் உரிமத்தை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மகாலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக்கேட்டோம். அவருக்கு எதிராக போலீசிலும் புகார் செய்தோம். இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்தனர். ரூ.85 லட்சம் இதுவரை திருப்பித்தரவில்லை. இதற்கிடையில், இவர்கள் செய்த இந்த மோசடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் சுரேஷ் சத்தியா மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்த சூழ்நிலையில், எங்களுக்கு தரவேண்டிய ரூ.85 லட்சத்தை தராமல், வானவராயன் வல்லவராயன் படத்தை செப்டம்பர் 12-ந் தேதி (இன்று) திரையிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.கோவிந்தராஜன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன். எனவே, வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். ஒருவேளை மனுதாரருக்கு தரவேண்டிய தொகையை எதிர்மனுதாரர் கொடுத்துவிட்டால், படத்தை அவர்கள் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

காப்பகம்