Thursday, October 2, 2014

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

1 comments:

  1. எனக்கென்றால் துளசி நடிப்பு கொஞ்சமும் ஒட்டவே இல்லை சகோ

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete

காப்பகம்