Thursday, August 14, 2014

என்று தணியும் இந்த மருத்துவர், பொறியாளர் மோகம்..?

தனியார் பல்கலைக்கழகங்களிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் முக்கியமான படிப்புகளுக்கு நன்கொடைக் கட்டணம் பெறப்படுவதாக இந்த ஆண்டும் தெரியவந்திருக்கிறது. நன்கொடைக் கட்டண வசூலுக்குத் தடை விதித்து சில மாநில அரசுகள் ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்றமும் 2003-ல் தனது தீர்ப்பு மூலம் இதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால், சட்டம் வேறு நடைமுறை வேறு என்பதுதான் உண்மை.

இந்த நன்கொடை நடைமுறையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆழ்ந்து விசாரித்து, அறிக்கை தருமாறு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷிதை உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் தகவல்களையும் தரவுகளையும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அவருக்குத் தர வேண்டும் என்றும் பெஞ்ச் கேட்டுக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பதில் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை காரணமாக இந்த நடவடிக்கை அவசியமாயிற்று.

சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய நாளிலிருந்தே இந்த கல்விக் கட்டணங்கள் குறித்துப் பொது விவாதம் நடந்துவருகிறது. கட்டுக்கடங்காத அளவில் தனியார் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிடுகிறது. தனியார் கல்லூரி தொடங்குவதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியைத் தனியார் நிர்வாகம் பெரும் பகுதியும், மாணவர்கள் சிறு பகுதியும் ஏற்க வேண்டுமென்பதிலும் நியாயம் இருப்பதாகவே ஏற்கப்பட்டது. ஆனால், கல்லூரிகளைத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நன்கொடைக் கட்டண அளவு குறைக்கப்படாமல் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, சில படிப்புகளுக்கு இந்தக் கட்டணம், மாணவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி காரணமாக மிகவும் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் தடையாக இருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஏதோவொரு வகையில் நன்கொடைக் கட்டணங்களை வசூலித்துக்கொண்டுதான் நிர்வாகங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை நிரப்புகின்றன. மருத்துவக் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் பெற ரூ.40 லட்சத்துக்குக் குறைந்து பணம் கொடுத்தால் கிடைக்காது, மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பில் சேர ஒரு கோடி ரூபாய் வரைகூட செலவாகிறது என்பதே இப்போதைய நிலவரம்.

எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களும் இதற்கு ஒரு வகையில் காரணம். இப்படி நன்கொடை செலுத்திப் படிக்கும் மாணவர் படிப்பு முடித்துவிட்டு மருத்துவராகவோ பொறியாளராகவோ பணியில் அமரும்போது அதிக அளவில் பணம் சம்பாதிப்பதைத்தானே வாழ்வின் நோக்கமாகக் கொள்வார்? இந்த வகையில் கல்வி கடைச்சரக்காகி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டது. குர்ஷித் கமிட்டி இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

கருப்புப் பணம் உருவாகும் துறைகளில் ஒன்றாகிவிட்டது கல்வித் துறை. அரசுக்கு மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தாலன்றி இந்தத் தீமையைத் தடுக்க முடியாது. அரசுக் கல்லூரிகள் பெருகி, தரமான கல்வி அவற்றில் வழங்கப்பட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்குமே தவிர வெறும் ஆணைகளையும் தீர்ப்புகளையும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

0 comments:

Post a Comment

காப்பகம்