Wednesday, October 1, 2014

தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி..?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

0 comments:

Post a Comment

காப்பகம்