Saturday, October 12, 2013

பூசணிக்காய் நம்பிக்கை உயிர்!






 நாளை ஆயுத பூஜை. எது நடக்கிறதோ இல்லையோ.. திருஷ்டி கழிக்க பூசணி சுற்றி உடைக்கும் நிகழ்ச்சி எல்லா இடங்களிலும் நடக்க போகிறது. அக்டோபர் மாதம் மழை காலத்தில் பெரும்பாலும் சாலைகளும் தெருக்களும் சகதியாக மாறிவிடும். இந்த நேரத்தில் பூசணிக்காய் சிதறல்கள் வாகனங்களில் நசுங்கி சாலைகளை கொழ கொழ என்று மாற்றி விடுகின்றன. வழுக்கி விழுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். 


பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. தெருக்கள், சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. பைக்கில் செல்பவர்கள் எத்தனை பேர் பூசணிக்காயால் சறுக்கி விழுந்துள்ளனர். பலர் உயிரை துறந்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 


சுற்றுப்புறத்தை நாமே கெடுத்துவிட்டு, துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.பூசணிக்காயால் பைக்கில் வழுக்கி விழுபவரின் உயிர் போகும் போது, மெதுவாக சென்றிருந்தால் நடந்திருக்காது. பார்த்து சென்றிருந்தால் நடந்திருக்காது, குடித்துவிட்டு ஓட்டாமல் இருந்திருந்தால் நடந்திருக்காது.  ஹெல்மெட் அணிந்திருந்தால் நடந்திருக்காது.. என்று பல காதுகளை காரணம் சொல்லி ஆறுதல் அடைவதே வழக்கமாகி விட்டது. 



ஆனால், சுற்றுப்புற கேடு, விபத்து என்று பல விஷயங்களுக்கு மூல காரணம் பூசணிக்காய் சிதறல்கள் என்பதை மறந்து விடுகிறோம்.பூசணிக்காய் இறப்புகளை தடுக்க தொடர்ந்து பிரசாரம் நடத்தப்படுகிறது. எனினும் விழிப்புணர்வுதான் முழுமையாக ஏற்படவில்லை. பூசணி உடைக்கலாம். உடைத்த பின் அதன் சிதறல்களை ஓரமாக தள்ளி வைத்தால் நடப்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 



இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு யோசிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம் வீட்டு முன்போ, கடை முன்போ உடைக்கப்படும் பூசணிக்காயே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தாலே போதும். திருஷ்டி கழித்த பின் அதன் சிதறல்களை ஓரமாக பெருக்கி தள்ளும் எண்ணம் வரும். அப்போதுதான் உண்மையாகவே திருஷ்டி கழியும்.

0 comments:

Post a Comment

காப்பகம்