Wednesday, October 23, 2013

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?


இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.

திருமண உறுதி (நிச்சயதார்த்தம்):

திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :

அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.

தமிழ்திருமுறை, திருமண தீபம்:

மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.

அம்மை அப்பர் கலச வழிபாடு:

மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.

நவகோள் வழிபாடு:

முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.

முளைப்பாலிகை வழிபாடு:

தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.

மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்:

மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.

மங்கள நான் வழிபாடு:

மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.


முன்னோர்கள் வழிபாடு:

வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

பாத பூஜை:

பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.

மங்கல நான் ஆகுதி:

அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.

விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:

மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.

அக்னி வலம் நிகழ்ச்சி:

மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.

அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:

அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.

ஆசீர்வாத நிகழ்ச்சி:

வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.

0 comments:

Post a Comment

காப்பகம்