Friday, August 22, 2014

'ஐ' டீஸர்: இரண்டு வருட உழைப்பு ஒரு நிமிடத்தில்..!

கோடம்பாக்க அகராதியில் பிரமாண்டம் என்றால் ஷங்கர். ‘ஐ’ படம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கொஞ்சமும் சூடு குறையாத எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இடையில் ‘ஐ’ படத்தைப் பற்றிய எதிர்மறைத் தகவல்களும் வலம் வந்தன. ஆனால் ஐ படத்தை வெற்றிகரமாக முடித்துக் கடந்த 17-ம் தேதி தனது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடியிருக்கிறார் ஷங்கர். விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ரகசியம் பொத்திப் பாதுகாக்கப்பட்டுவரும் நிலையில் இந்தப் படத்தின் டீஸர் டிரைலரை கட் செய்து பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை நமக்குத் திரையிட்டுக் காட்டினார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இரண்டு வருட உழைப்பை ஒரே நிமிடத்தில் கண் முன் நிறுத்துகிறார்கள்.

‘ஐ’ படத்தில் ஷங்கர் கண்டிருக்கும் கனவு, விக்ரமின் உழைப்பு ஆகியவை என்ன என்பதற்கு இந்த டீஸர் ஒன்றே போதும் எனத் தோன்றுகிறது. முதல் ஷாட்டில் விக்ரம் கயிற்றில் தொங்கிக்கொண்டு வருகிறார். படத்தின் ஸ்டில்களைக்கூட ஏன் வெளியிடாமல் ரகசியம் காத்தார் ஷங்கர் என்பதற்குப் படத்தின் டீஸரில் பதில் இருக்கிறது. விக்ரமின் ஒவ்வொரு மேக்கப்பும், இது விக்ரமா என்று கேட்க வைக்கிறது. ‘ஐ’ தன்னளவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று முதல் டீஸரைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

முக்கியக் காட்சிகள்:- பாலத்தின் மீது செல்லும் லாரியில் நிறையக் கட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் மேல் விக்ரம் (மேக்கப்புடன்) ஓடுகிறார். ஒவ்வொரு கட்டையாக உருண்டு விழுகிறது. அந்தக் காட்சியைப் பெரிய திரையில், ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
ஒரு பாலத்தில் விக்ரம் மேக்கப் இல்லாமல், சிவப்பு பனியன் அணிந்து, பைக் ஒட்டிக்கொண்டு வருகிறார். பைக்கின் முகமும், மொத்த பைக்கும் அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) முறையில் மாறிக்கொண்டே இருக்கிறது. அதில் விக்ரம் பார்த்துக்கொண்டே ஓட்டிக்கொண்டு வருகிறார்.

மேக்கப் எதுவும் இல்லாமல், மேல் சட்டை இல்லாமல் விக்ரம் வெயிட் தூக்கும் காட்சி, பெரிய மரக்கிளையில் விக்ரம் (மேக்கப்புடன்) கிளைகளை நகர்த்திப் பாதி முகம் காட்டுவது, பாடல் காட்சிக்காகப் பின்னணியில் கலர் கலராக உடை அணிந்தவர்களுக்கு முன்னால் விக்ரம், எமி ஜாக்சன் இருவரும் ஆடுவது மற்றும் விக்ரம் கலர் கலரான பலூன்களில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற காட்சி, ‘கில்லி’ படத்தில் விஜய் போட்டிருக்கும் டி-ஷர்ட் போன்று அணிந்துகொண்டு விக்ரம் (மேக்கப்புடன்) சிவப்பு நிறப் பட்டுப் புடவை அணிந்த எமியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது எனப் பல்வேறு காட்சிகள் நிறைந்தது டீஸர்.

ஷங்கர் - விக்ரம் கூட்டணி உழைப்பு:- ஷங்கருக்கும், விக்ரமுக்கும் ‘அந்நியன்’ படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது என்றால் தவறு. ஷங்கர், விக்ரம் இருவருமே ‘காதலன்’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா பாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது விக்ரம்தான். அப்படி ஆரம்பித்த நட்பால் ‘அந்நியன்’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அந்தக் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்தின் விக்ரமின் உழைப்பு என்பது மற்ற நடிகர்கள் யாரும் செய்யத் துணியாத ஒன்று. அவ்வளவு மேக்கப், உழைப்பு, உடலமைப்பு மாற்றம் என ஷங்கரின் கனவுக் கதையை நிஜமாக்கியவர் விக்ரம். இந்தப் படத்திற்காகச் சாப்பிடாமல் 50 கிலோ வரை உடம்பைக் குறைத்து அனைவரையும் ‘ஐ’யோ எனச் சொல்ல வைத்திருக்கிறார். ஷங்கரின் கனவு, விக்ரமின் உழைப்பு இரண்டிற்கும் காசை வண்டி வண்டியாகக் கொட்டியிருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம்.

'ஐ' படத்தின் டீஸரில் இறுதி ஷாட்டில் எமி ஜாக்சன் (ஒரு அறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில்) 'யார் நீ' என்று கேட்டுக் கத்துவார், அப்போது விக்ரம் (மேக்கப்புடன்) கதவை மூடுவார். அந்தக் கதவின் மீது 'ஐ' என்று போட்டு, ஷங்கர் முதல் அனைத்துப் பெயர்களையும் போடுவார்கள். அதைப் பார்க்கும் யாரும் அனிச்சையாகக் கைதட்டுவார்கள்.

ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கும் ஹீரோயின்

உடன் நடிக்கும் ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


‘ஜாக்பாட், ‘ராகினி, ‘எம்எம்எஸ் 2, ‘ஜிசிம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘வடகறி என்ற படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர்களிடம் இவர் ரகசியமாக கண்டிஷன் போட்டு நடிப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கு முன்பு உடன் நடிக்கும் ஹீரோவிடமிருந்து எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ததற்கான டாக்டர் சான்றிதழ் கண்டிப்பாக தரவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

படத்தில் நடிக்கும்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் வரும். எனவேதான் இந்த சான்றிதழை சன்னி கேட்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். ‘ஜிசிம் 2 படத்தில் அவர் நடித்தபோது அப்படத்தில் நடித்த ரன்தீப் ஹுடா, அருனோதய் சிங் ஆகியோரிடமிருந்து இதுபோன்ற சான்றிதழ் பெற்ற பிறகே நடிக்க சம்மதித்துள்ளார்.

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (2014) - திரைவிமர்சனம்

சேலத்தில் புகழ்பெற்ற அய்யம்பேட்டை சித்தவைத்திய சாலை வைத்து நடத்தி வருகிறார் சிகாமணி. சிறுவயதில் இவரை வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக, இவருடைய அப்பா படிப்பை நிறுத்தி தலைமுறை தலைமுறையாக செய்துவரும் சித்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்து சித்த வைத்தியராக ஆக்குகிறார்.

சிகாமணி படிக்காததால் இவருடைய நண்பர்கள் இவரை ஏமாற்றி இவரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். இது சிகாமணிக்கும் தெரியவருகிறது. தான் படிக்காதவன் என்பதால்தான் தன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். ஆகையால், படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் யாரும் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்று முடிவெடுக்கிறான்.

இதற்காக காலேஜ் வாசலில் அமர்ந்துகொண்டு தனக்கு பிடித்த பெண்ணை தேடுகிறார். அப்போது, காலேஜில் இருந்து வெளியே வரும் நந்தினியை பார்த்ததும் அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார்.

அவளை பின்தொடர்ந்து போய் அவளது வீட்டை கண்டுபிடித்து பெண் கேட்க போகிறார். அவளோ தன்னை கடத்தத்தான் அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, தனது அப்பாவிடம் சென்று முறையிடுகிறார்.

அந்த ஊரில் மிகப்பெரிய மனிதரான நந்தினியின் அப்பா சிலம்பு சின்னத்துரை, தனது மகளை பின்தொடர்ந்து வந்த சிகாமணியையும், அவரது நண்பர் பால்பாண்டியையும் அடித்து துவம்சம் செய்கிறார்.

அப்போது சிகாமணி போனுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசும் சின்னத்துரை, அந்த போனில் பேசியவர் டாக்டர் இருக்கிறாரா? என்று கேட்டதும், சிகாமணி டாக்டர் என்று தவறாக புரிந்துகொள்கிறார். இவர்களும் அடி தாங்கமுடியாததால் தாங்கள் டாக்டர்தான் என்று பொய் சொல்கிறார்கள்.

இதையடுத்து, அவரது பெண்ணை திருமணம் செய்யத்தான் அவளை பின்தொடர்ந்தோம் என்று உண்மையைச் சொன்னபின், சின்னத்துரைக்கு சிகாமணியை பிடித்துப்போய் விடுகிறது. தனது பெண்ணை அவருக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவெடுக்கிறார். இருவீட்டாருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருக்க சிகாமணி-நந்தினி திருமணம் நடந்தேறுகிறது. இதற்கிடையில், சிகாமணியின் நண்பர்கள் அவன் உண்மையான டாக்டர் என்பதை பெண் வீட்டாரிடம் சொல்லிவிட துடியாய் துடிக்கிறார்கள்.

இறுதியில், சிகாமணி டாக்டர் இல்லை என்பது நந்தினிக்கும், அவரது பெற்றோருக்கும் தெரிந்தா? நண்பர்கள் சிகாமணியின் முகத்திரையை கிழித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சித்த வைத்தியர் சிகாமணியாக வரும் பரத், அப்பாவி இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். தான் டாக்டர் இல்லை என்பது பெண் வீட்டாருக்கு தெரிந்துவிடுமோ? என்று தவிக்கும் காட்சிகளில் நம்மையும் தவிக்க விடுகிறார்.

நந்தினியாக வரும் நந்திதா, சேலையில் கச்சிதமாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நந்திதா இதுவரை நடித்திருக்கும் படங்களில் வரும் பாடல்களில் முகபாவணைகளிலேயே எல்லோரையும் கவர்ந்துவிடுவார். இப்படத்தில் குத்துப்பாட்டு, வெஸ்டர்ன் என ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால், பரத்துக்கு இணையாக இவரால் ஆட்டம் போட முடியவில்லை.

சிலம்பு சின்னதுரையாக வரும் தம்பி ராமையா தனது மூத்த மகளை தொழிலதிபருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டேன், இளைய மகளை டாக்டருக்கு திருமணம் செய்துகொடுத்து விட்டேன் என்று பெருமைப்படும் அப்பாவாக அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், படம் முழுக்க இவருடைய சத்தம்தான் அதிகமாக கேட்கிறது. அதை கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, கருணாகரன், படவா கோபி, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து செம்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவன் படிக்காமல் பெரிய ஆளாக இருந்தால் அவன் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மைய கருத்தை வைத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதேவேளையில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் படத்தில் விளக்கியிருக்கிறார். சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்தை காமெடியாக சொல்ல நினைத்தது சிறப்பு.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். சண்டைக்காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. பாடல் காட்சிகளிலும் சிரத்தை எடுத்திருக்கிறார். சைமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலா பாடும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ சிரிப்பு வைத்தியம்

வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் ஜோதிகா..!

1999ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை கோலிவுட்டை கலக்கிய ஜோதிகா சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு வெளியேறினார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக… தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா மீண்டும் நடிக்க வர சூர்யாதான் காரணமாம். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை பார்த்த சூர்யாவுக்கு இந்தப் படத்தை தமிழில் ஜோவை நடிக்க வைக்கலாமே என்று தோன்றி இருக்கிறது!


இது குறித்து ஜோதிகாவிடம் பேசிவிட்டு, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸை தொடர்பு கொண்டு, ”ஹவ் ஓல்டு ஆர் யூ’வின் தமிழ் ரீ-மேக்கில் ஜோதிகா நடிக்க விரும்புகிறார்.” என்ற தகவலை சொன்னதோடு, ”உங்களால் சென்னைக்கு வரமுடியுமா? என்று கேட்டாரம்! இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் சென்னைக்கு வந்தார். இதற்கிடையில் ஜோதிகாவையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் இத்தனை புகழோடு இருந்தவர், மீண்டும் நடிக்க வருவதென்றால் அந்தப் படத்தில் அவருக்கு தீனி போடும் கேரக்டர் அவருக்கு அமைய வேண்டுமே? அவரின் காத்திருப்பு வீண் போகாது என்றே கூறுகிறார்கள் ஹவ் ஓல்டு ஆர் யூ மலையாளப்படத்தைப் பார்த்தவர்கள்.

அந்தப் படத்தின் கதை என்ன தெரியுமா? வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த வேடத்தில் மஞ்சு வாரியரை நடிக்க வைத்திருந்தனர். இப்போது அந்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

ஆட்டத்தில் சரிகாவின் மகள் என்பதை நிரூபித்த ஸ்ருதி..!

வீ.சேகர் பிஸியாக இருந்தபோது கடைபிடித்து வந்த பழக்கம் இது. படத்துக்கு பூஜை போடும்போதே படத்தின் வெளியீட்டு தேதிதியை அறிவித்துவிடுவார். அவரைப்போலவே படத்தின் பூஜை அன்றே படத்தின் ரிலீஸ் தேதியை தீர்மானித்து அறிவித்துவிடுமளவுக்கு பக்கவாக திட்டமிட்டு வேலை செய்கிறவர் இயக்குநர் ஹரிதான். விஷாலை வைத்து ஹரி தற்போது இயக்கி வரும் பூஜை படத்தை ஆரம்பித்தபோதும் கூட தீபாவளி வெளியீடு என்ற அறிவிப்போடுதான் துவங்கினார்.


தாமிரபரணி படத்திற்குப் பிறகு விஷாலும், இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. பூஜை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம் பெறும் சில காட்சிகளை பழைய ஹைதராபாத்திலுள்ள கோல்கோண்டா கோட்டையில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஹரி. இதற்காக ஹைதராபாத் சென்றுள்ள பூஜை பட டீம், இன்று முதல் அந்தக் கோட்டையில் படப்பிடிப்பை நடத்தவிருக்கின்றனர்.

அங்கு நடைபெறும் படப்பிடிப்பைத் தொடர்ந்து இரண்டு பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரு பாடலை ஹைதராபாத்தில் ஒள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலம், மற்றொரு பாடலை சுவிட்சர்லாந்தில் படம் பிடிக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புடன் பூஜையின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுகிறது.

பூஜை படத்தில் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். பாடல் காட்சிகளில் தான் சரிகாவின் மகள் என்பதை நிரூபித்திருக்கிறாராம். பூஜை படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. கடந்த வருட தீபாவளி அன்று விஷாலின் பாண்டிய நாடு படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்த வருட தீபாவளி விருந்தாக பூஜை படம் இருக்குமா?

காப்பகம்